விருதுநகரில் காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை


விருதுநகரில் காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
x

விருதுநகரில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா ேநற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவச்சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

விருதுநகர்

விருதுநகரில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா ேநற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவச்சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

காமராஜர் பிறந்த நாள்

பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா அவர் பிறந்த ஊரான விருதுநகரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுகிறோம். காமராஜர் கல்விக்கண் திறந்தவர். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அவரது வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மேலும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாமும் அவர் காட்டிய வழியில் பயணிப்போம். விருதுநகர் மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமைத்தொகை பதிவு வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்

அப்போது, கலெக்டர் ஜெயசீலன், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன் (விருதுநகர்), ரகுராமன் (சாத்தூர்), சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நினைவு இல்லம்

முன்னதாக காமராஜர் நினைவு இல்லத்திலும், கலெக்டர் அலுவலக வளாகத்திலும் உள்ள காமராஜர் சிலைகளுக்கு கலெக்டர் ஜெயசீலன், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்களும் மரியாதை செலுத்தினர்.

விருதுநகர் நகரசபை அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு நகரசபை தலைவர் மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைத்தலைவர் தனலட்சுமி, கமிஷனர் லீனாசைமன் மற்றும், கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story