திருச்செந்தூர் கோவிலில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு


திருச்செந்தூர் கோவிலில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நாளான வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் கோவில் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண்பதற்காக பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கோவில் வளாகம், கடற்கரையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

அமைச்சர்கள் ஆய்வு

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு திடீரென வந்து, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோவில் அன்னதான மண்டபத்தில் சாப்பிட்ட பக்தர்களிடம் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தனர்.

மேலும், கோவில் வளாகத்தில் செயல்படுகின்ற சிறப்பு மருத்துவ முகாமையும், சுகாதார வசதிகளையும் பார்வையிட்டனர்.

தங்கத்தேர் இழுத்தனர்

பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர்கள், இரவில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் (தூத்துக்குடி), சரவணன் (நெல்லை) மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story