சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்


சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்


தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குடும்ப ஆண்டு வருமானம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 1-ன் கீழ் தனி நபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சம் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வரையிலும், நபர் ஒருவருக்கு ரூ.1½ லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

கல்வி கடன்

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

மேலும், சிறுபான்மையின மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிக பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் உதவி வழங்கப்படுகிறது.

தேவையான ஆவணங்களுடன்...

எனவே, இந்த மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் பெறும் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானசான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடசான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்டஅறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்கு மட்டும்) மற்றும் கூட்டுறவுவங்கிகள் கோரும் இதரஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விகட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-ம் தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story