சிறுபான்மையின மக்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையின மக்கள் டாம்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடன் திட்டங்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகிய 4 கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்களின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கும் நபர்களின் குடும்ப வருமானம், திட்டம் மற்றும் ஆண், பெண் உள்ளிட்டவற்றை பொறுத்து கடன் தொகை குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் இந்த 4 வகையான கடனுதவி தேவைப்பட்டால் அதற்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, ரேஷன் கார்டு அல்லது இருப்பிட சான்று, கடன்பெறும் தொழில் குறித்த விவரம் அல்லது திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
சான்றிதழ்கள்
கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையின மக்கள் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், வேலூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.