சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா: 153 பேருக்கு ரூ.17.89 லட்சம் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் கார்மேகம் வழங்கினார்


சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா: 153 பேருக்கு ரூ.17.89 லட்சம் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
x

சேலத்தில் நடந்த சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 153 பேருக்கு ரூ.17.89 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

சேலம்

உரிமைகள் தினவிழா

சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

விழாவில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு சிறுபான்மையின மக்களின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுபான்மையினர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில் செய்வதற்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் தனி நபர் கடன், கல்விக் கடன், சிறுபான்மை சுய உதவிக்குழுக் கடன் போன்ற கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.25 ஆயிரம் மானியம்

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம், வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம், வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. மேலும், மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம், சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை, டாம்கோ கடனுதவிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்று வழங்கப்படும் நலத்திட்டங்களைப் பற்றி விழிப்புணர்வு பெற்று, தங்களின் தேவைக்கேற்ற திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

153 பேருக்கு...

தொடர்ந்து, 21 பேருக்கு உலமாக்கள் மற்றும் இதர பணியாளர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளும், 14 பேருக்கு ரூ.72 ஆயிரத்து 084 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களும், 6 பேருக்கு ரூ.36 ஆயிரத்து 960 மதிப்பிலான தையல் எந்திரங்கள் உள்பட மொத்தம் 153 பேருக்கு ரூ.17 லட்சத்து 89 ஆயிரத்து 44 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன், அரசு காஜிகள் அபுல்கலாம்கான், மவுலவிகலீல் அஹமது, ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி எஸ்.ஆர்.அன்வர் உள்பட சிறுபான்மையின பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story