24 மணி நேரம் ஆற்றில் மிதந்து பெண் உயிர் தப்பிய அதிசயம்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் 24 மணி நேரம் ஆற்றில் மிதந்து உயிர்பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே 2 முறை அவர் சாவின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பிய தகவலும் வெளியாகி உள்ளது.
திருவட்டார்:
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் 24 மணி நேரம் ஆற்றில் மிதந்து உயிர்பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே 2 முறை அவர் சாவின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பிய தகவலும் வெளியாகி உள்ளது.
குமரி மாவட்டத்தில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றி கூறப்பட்டதாவது:-
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்
திருவட்டார் அருகே உள்ள பாரதபள்ளி மடத்து விளையைச் சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மனைவி புஷ்பபாய் (வயது 60). இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். நேற்றுமுன்தினம் மதியம் புஷ்பபாய் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடி சென்று பார்த்த போது ஆற்றங்கரையில் புஷ்பபாய் கொண்டு சென்ற துணிகள் மற்றும் ஒரு பக்கெட் மட்டும் இருந்தது. ஆனால் அவரை காணவில்லை.
இதனால் குளித்த போது அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் பதற்றத்திற்கு ஆளானார்கள். இதனை தொடர்ந்து குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இறந்ததாக நினைத்து குடும்பத்தினர் சோகம்
மாலை 6 மணி வரை தேடும் பணி நடந்தது. ஆனால் புஷ்பபாயை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு புஷ்பபாய் இறந்திருக்கலாம். அவருடைய உடல் எங்கு சிக்கி கிடக்கிறதோ? என குடும்பத்தினர் நினைத்து கண்ணீருடன் சோகத்தில் மூழ்கினர். பின்னர் நேற்று காலையில் 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஜீவன்ஸ், மைக்கேல் தனபாலன், செல்வ முருகேசன் ஆகியோர் தலைமையிலான 3 குழுக்கள் எருக்கலம் விளை, தேமானூர், திக்குறிச்சி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தண்ணீருக்குள் மூழ்கியும், பைபர் படகு மூலம் ஆற்றில் சென்றும், கரையோர பகுதிகளிலும் புஷ்பபாய் உடல் சிக்கியுள்ளதா? என சல்லடை போட்டு தேடினர்.
ஆற்றில் அசைவுடன் உடல்
தீயணைப்பு வீரர்கள் ஜெகதீஷ், கபில் சந்துரு, நிஜல்சன், அஜின், கோட்டை மணி, மாரிச்செல்வம் ஆகியோர் கொண்ட குழு திக்குறிச்சி பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்ட போது ஆற்றில் செடிகள், புதர்கள் நிறைந்த பகுதியில் ஒரு பெண்ணின் முகம் மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரிந்தபடி மிதந்தது. புஷ்பபாய் தான் பிணமாக கிடக்கிறார் என நினைத்து அங்கு படகை செலுத்தி கயிற்றால் இழுக்க முயன்றனர். அப்போது திடீரென அந்த முகத்தில் கண் அசைந்தது. இதனை பார்த்த தீயணைப்பு வீரர்கள் கண் அசைந்ததை பார்த்ததாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
உடனே அருகில் சென்று அவரது கையை தொடவும் விரலும் படபடவென ஆடியது. இதனால் புஷ்பபாய்க்கு உயிர் இருக்கிறது, அவரை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என அடுத்த கட்ட பணியை துரிதப்படுத்தினர்.
முதலுதவி சிகிச்சை
உடனடியாக உயிர்காக்கும் ஜாக்கெட் மூலம் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சற்று தாமதப்படுத்தினாலும் புஷ்பபாயின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்ற இக்கட்டான சூழ்நிலையில் அருகில் நின்றிருந்த டெம்போவில் ஏற்றி அவரை கொண்டு சென்றனர்.
24 மணி நேரம் ஆற்றுக்குள்ளேயே இருந்ததால் புஷ்பபாயின் உடல் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. எனவே உடலுக்கு வெப்பத்தை ஏற்படுத்தும் விதமாக தீயணைப்பு வீரர்கள் கை, கால்களை தொடர்ந்து அழுத்தியபடி முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
உயிர் தப்பிய அதிசயம்
பின்னர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயக்கத்திலேயே இருந்த அவர் சிகிச்சைக்கு பிறகு ஒரு மணி நேரத்தில் இயல்பான நிலைக்கு வந்தார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண் 24 மணி நேரம் தண்ணீரிலேயே மிதந்து உயிருடன் தப்பிய அதிசயம் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. நேற்றுமுன்தினம் மதியம் 12.30 மணியில் இருந்து நேற்று மதியம் 12.30 மணி வரை புஷ்பபாய் ஆற்றில் மிதந்து உயிர் பிழைத்துள்ளார்.
ஏற்கனவே 2 முறை சாவை வென்றவர்
இதுகுறித்து புஷ்பபாயின் குடும்பத்தினர் கூறுகையில், "ஏற்கனவே 2 முறை அவர் சாவின் விளிம்பு வரை சென்று தப்பியவர்" என்ற தகவல் தெரியவந்தது.
அதாவது, ஆற்றில் குளிக்க சென்ற போது அவர் வழுக்கி விழுந்துள்ளார். ஆனால் தலையில் அடிபடாததால் காயத்துடன் உயிர் தப்பினார். அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வர அவர் மிகவும் சிரமப்பட்டார். இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி புஷ்பபாய் தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தார். சிகிச்சைக்காக அவரை மீட்டு டெம்போவில் கொண்டு சென்ற போது திடீரென அசைவு ஏற்பட்டு உயிர் பிழைத்தார். தற்போது அவர் 3-வது முறையாக சாவின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பியதாக குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
வெள்ளத்தில் சிக்கி உயிர்தப்பியது எப்படி?
ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பியது எப்படி? என்று பெண் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
உயிர் தப்பிய பெண்
24 மணி நேரம் ஆற்றில் மிதந்து உயிர் பிழைத்தது எப்படி? என்பது குறித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் புஷ்பபாயிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
போர்வை உள்ளிட்ட துணிகளை துவைக்க நேற்றுமுன்தினம் மதியம் ஆற்றுக்கு சென்றேன். போர்வையை துவைத்த பிறகு கரையில் இருந்தபடி பிழிந்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் போர்வை கனமாக இருந்ததால் இழுத்த போது திடீரென பின்னோக்கி ஆற்றுக்குள் விழுந்து விட்டேன்.
மயக்க நிலைக்கு சென்றேன்
எனக்கு நீச்சல் தெரியும். ஆனால் தண்ணீர் அதிகமாக ஓடியதால் அடித்து செல்லப்பட்டேன். செல்லும் வழியில் ஒரு கட்டை சிக்கியது. அந்த கட்டையை கெட்டியாக பிடித்தபடி இருந்தேன். கடவுளிடம் எப்படியாவது என்னை காப்பாற்றி விடு என வேண்டினேன். இதற்கிடையே தண்ணீரை அதிகமாக குடித்திருந்ததால் மயக்க நிலைக்கு சென்று விட்டேன். அதன் பிறகு எனக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. தற்போது உயிருடன் மீட்கப்பட்ட விவரம் தான் எனக்கு தெரியும். 7 கிலோ மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டதாகவும், 24 மணி நேரம் தண்ணீரில் மிதந்து உயிர் பிழைத்ததாகவும் என்னிடம் தீயணைப்பு வீரர்கள், குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.