விழுப்புரத்தில்திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப்போட்டி மழையால் நிறுத்தம்இறுதிச்சுற்று இன்று நடக்கும் என்று அறிவிப்பு
விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான மிஸ்கூவாகம் அழகிப்போட்டி மழையால் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இறுதிச்சுற்று போட்டி இன்று நடக்கும் என்று அறிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருநங்கைகள் பெருமளவில் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு கலந்து கொள்ளும் திருநங்கைகளுக்கு இடையே மிஸ் கூவாகம் என்னும் அழகி போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து மிஸ் கூவாகம் நிகழ்ச்சியை நடத்தியது. தற்போது கூவாகம் கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட எல்லையில் வருவதால், அழகிப்போட்டியில் முதல் 2 சுற்றுகளை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலும், இறுதிச்சுற்று போட்டியை விழுப்புரத்திலும் நடத்த ஏற்பாடு செய்தனர்.
உளுந்தூர்பேட்டையில்...
அதன்படி அழகிப்போட்டியின் முதல் சுற்று, 2-ம் சுற்று தேர்வு போட்டிகள் நேற்று காலை உளுந்தூர்பேட்டை- திருச்சி மெயின்ரோட்டில் உள்ள சக்கரவர்த்தி லலிதா மகாலில் நடைபெற்றது.
இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் மணிக்கண்ணன், உதயசூரியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு செயலாளர் கங்கா, பொருளாளர் சோனியா, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் சுசீலா, சிந்து ஆகியோர் வரவேற்றனர்.
அழகிப்போட்டி
இதைத்தொடர்ந்து காலை 11.30 மணியளவில் மிஸ் கூவாகம்-2023 அழகிப்போட்டிக்கான முதல் சுற்று நடந்தது. இதில் விழுப்புரம், கடலூர், சென்னை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 46 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.
இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இப்போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 16 பேர் 2-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும், மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்கள் 16 பேரும் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தில் இறுதிச்சுற்று
இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் இறுதிச்சுற்றுக்கான அழகிப்போட்டி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது.
இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி முன்னிலை வகித்தார். தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் மோகனாம்பாள் அனைவரையும் வரவேற்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மதிவேந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருநங்கைகளுக்கு தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பேசினார்.
அப்போது அங்கு லேசான மழை பெய்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டார்.இதை தொடர்ந்து நடந்த விழாவில் திருநங்கைகள் சுயதொழில் புரிவதற்கான வங்கி கடனுதவி, திருநங்கைளுக்கான சுயஉதவிகுழுக்கான கடனுஉதவி, மக்களை தேடி மருத்துவ பெட்டகம், அடையாள அட்டை என்று 662 பேருக்கு ரூ.2 கோடியே 75 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து இளம் சாதனையாளருக்கான விருது திருநங்கைகள் சமீராநயன்தாரா, தீப்தி, ரீயா, அருண்கார்த்திக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும், விழுப்புரத்தில் நடந்த மராத்தான் போட்டியில் இலக்கை நோக்கி ஓடிய 15 திருநங்கைளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கன மழை
இதை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது. அப்போது கனமழை பெய்தது. இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுர்கள் அங்கிருந்து அவசரஅவசரமாக புறப்பட்டனர். அதோடு அங்கு திரண்டிருந்த மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கனமழையின் காரணமாக, நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது. எனவே மிஸ் கூவாகம் 2023-க்கான இறுதி போட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடத்தப்படும் என்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை
திருநங்கைகளுக்கான நடனப்போட்டி மற்றும் அழகிப்போட்டியை பார்த்து ரசிக்க வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இவர்கள் நிகழ்ச்சி முழுவதையும் கண்டுகளித்து தங்களது கேமராக்களில் புகைப்படம் எடுத்தனர். சிலர், திருநங்கைகளுடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
விழுப்புரத்தில் நடந்த விழாவில் கூடுதல் கலெக்டர் சித்ராவிஜயன், டாக்டர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் அன்னியூர்சிவா, விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷீலாதேவிசேரன், விக்கிரவாண்டி ஒன்றியக்குழு தலைவர் சங்கீதஅரசி, துணைத்தலைவர் ஜீவிதா ரவி, விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர்கள் ஜெயரவிதுரை, வேம்பி ரவி, மாவட்ட சமூகநல அலுவலர் லலிதா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, திருநங்கைகள் தேசிய கவுன்சில் உறுப்பினர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.