நங்கநல்லூரில் மாயமான 10-ம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் பிணமாக மீட்பு


நங்கநல்லூரில் மாயமான 10-ம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் பிணமாக மீட்பு
x

மாயமான 10-ம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் பிணமாக மீட்கப்பட்டார்.

பல்லாவரம்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் அருகே உள்ள உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகள் வேதிகா(வயது 15). இவர், நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 17-ந்தேதி காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சீருடையில் சைக்கிளில் சென்ற மாணவி அதன்பிறகு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக், தனது மகள் மாயமானதாக மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மாயமான மாணவியை தேடி வந்தனர்.

பிணமாக மீட்பு

இந்த நிலையில் மாயமான மாணவி வேதிகா, நங்கநல்லூர் பர்மா காலனியில் உள்ள தலைக்கனஞ்சேரி கல்குவாரி குட்டையில் பிணமாக கிடந்தார். அது பல்லாவரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் பல்லாவரம் போலீசார், தாம்பரம் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சுமார் 5 மணிநேரம் போராடி குட்டையில் மிதந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்துவிட்டு உடலை வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சாவுக்கான காரணம் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story