காணாமல் போன சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு


காணாமல் போன சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு
x

மங்களமேடு அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டான்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வடக்கு மாதவியை அடுத்த ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சத்யா. இவர்களுடைய மகன் சுதர்சன் (வயது 5). கோவிந்தராஜ் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சத்யா தனது மகன் சுதர்சனுடன் தனியாக வசித்து வந்தார். கடந்த 5-ந்தேதி சத்யா தனது மகன் சுதர்சனுடன் அனுக்கூர்குடிகாடு காட்டுக்கொட்டையில் வசித்து வரும் தனது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை 10 மணியளவில் சுதர்சனை காணவில்லை. இதனால் அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் பலரும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

அப்போது அனுக்கூர்குடிகாடு பகுதியில் உள்ள பாசன கிணற்றின் அருகே சுதர்சனின் செருப்பு மற்றும் பொம்மைகள் கிடந்தன. ஒருவேளை சிறுவன் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். அப்போது இறந்த நிலையில் சுதர்சனின் உடல் மீட்கப்பட்டது. இதை பார்த்ததும் அவரது தாய் உள்ளிட்டோர் கதறி அழுதனர். இதையடுத்து சுதர்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் இறந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story