சேலத்தில் மாயமான கல்லூரி மாணவர் கொலை?-உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை


சேலத்தில் மாயமான கல்லூரி மாணவர் கொலை?-உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Jun 2022 9:45 PM GMT (Updated: 2022-06-12T03:17:44+05:30)

சேலத்தில் மாயமான கல்லூரி மாணவர் உடல் மீட்கப்பட்டது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சேலம்:

சேலத்தில் மாயமான கல்லூரி மாணவர் உடல் மீட்கப்பட்டது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்

சேலம் அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய மகன் விஸ்வா (வயது 19). இவர், சேலம் அரசு கலைக்கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த 8-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து விஸ்வாவின் தந்தை தர்மலிங்கம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவரை தேடி வந்தனர்.

பிணமாக மீட்பு

இந்தநிலையில், பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பகுதியில் முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது, 3 நாட்களுக்கு முன்பு மாயமான கல்லூரி மாணவர் விஸ்வா உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

மேலும், அவரது தலையிலும், கை பகுதியிலும் காயங்கள் இருந்தன. இதனால் ரெயிலில் மோதி அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து கல்லூரி மாணவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மாணவரின் பெற்றோர், உறவினர்கள், உடன் படிக்கும் கல்லூரி நண்பர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் விஸ்வாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

கல்லூரி மாணவர் விஸ்வா, பெண் யாரையாவது காதலித்து வந்தாரா? எனவும், அதனால் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்து கொலை செய்து உடலை முட்புதரில் வீசினார்களா? அல்லது இரவு நேரத்தில் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story