சென்னையில் மாயமான பள்ளி மாணவன் டெல்லியில் மீட்பு


சென்னையில் மாயமான பள்ளி மாணவன் டெல்லியில் மீட்பு
x

சென்னையில் மாயமான பிளஸ்-1 மாணவனை டெல்லியில் மீட்ட போலீசார், அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவர், கடந்த 2-ந்தேதி வேளச்சேரியில் உள்ள பள்ளிக்கு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுபற்றி மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படை போலீசார், மாணவர் படித்த பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மாணவர், மடிப்பாக்கம் ராம் நகர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் ஏறி சென்டிரல் ரெயில் நிலையம் சென்றது தெரிந்தது.

இதையடுத்து சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மாணவர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் டெல்லி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் டெல்லி ஆர்.பி.எப். போலீசாருக்கு மாயமான மாணவரின் புகைப்படத்துடன் 'வாட்ஸ்அப்'பில் தகவல் அனுப்பி வைத்தனர். மேலும் தனிப்படை போலீசாரும் விமானத்தில் டெல்லி சென்றனர். பின்னர் சென்னையில் இருந்து டெல்லி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கிய மாணவனை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.

மாணவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர், "நான் அமெரிக்காவில் சென்று படிக்க ஆசைபட்டேன். இதற்காக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் நடத்தும் தேர்வில் வெற்றிெபற்றால் உடனடியாக அமெரிக்கா செல்ல அனுமதி கிடைக்கும் என்று சிலர் கூறியதால் டெல்லி வந்ததாக" கூறினார். மாயமானதாக புகார் கொடுத்த 36 மணி நேரத்துக்குள் மாணவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த தனிப்படையினரை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.


Next Story