காணாமல் போன பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
திருப்பத்தூரில் காணாமல் போன பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
திருப்பத்தூர் தாலுகா புதிய அத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (வயது 34), கட்டிட உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருடைய கணவர் சங்கர் (47). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
இந்துமதிக்கும் பொம்மிகுப்பம் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரகு (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அவருடன் பெங்களூருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரகுவின் மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கவிதாவுடன் வாழ்வதாக ரகு சம்பந்தம் தெரிவித்தார். இதையடுத்து இந்துமதியை கணவருடன் வாழ போலீசார் அனுப்பி வைத்தனர்.
கடந்த 31-ந் தேதி இந்துமதி திடீரென காணாமல் போனார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பூபாலன் ரெட்டியார் என்பவரின் கிணற்றில் இந்துமதி பிணமாக இருப்பதை பார்த்த உறவினர்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசில் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்துமதி சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.