டீக்கடைகளில் முறைகேடாக பயன்படுத்தும் சிலிண்டர்கள்
கூடலூர் பகுதியில் டீக்கடைகளில் சிலிண்டர்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம், லோயர்கேம்ப் ஆகிய பகுதியில் 2 தனியார் நிறுவனங்கள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலிண்டர்கள் வீட்டு இணைப்பு மற்றும் வர்த்தக இணைப்பு என்று 2 வகையான இணைப்புகளாக வழங்கப்பட்டு வருகிறது.
கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதில்லை. இதற்கு பதிலாக வீடுகளில் பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்களை முறைகேடுகளாக பயன்படுத்துவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இதனால் சில நேரங்களில் வீட்டு இணைப்பு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே கூடலூர் பகுதியில் டீக்கடைகளில் கியாஸ் சிலிண்டர்கள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஓட்டல் மற்றும் டீக்கடைகளில் வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டர்களை உபயோகப்படுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.