வடிகால் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்


வடிகால் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் பகுதியில் வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடிகால் வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பிரதான தெற்கு ராஜன் வாய்க்காலிலிருந்து பிரிந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. மேலும் மழை காலங்களில் குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள மழை நீரை எளிதில் வெளியேற்றும் வகையில் கொள்ளிடம் ரெயில் நிலையம் செல்லும் சாலையின் குறுக்கே சென்று இறுதியாக நாதல் படுகை கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் சென்று கலக்கிறது.

இது கொள்ளிடம் பகுதியில் சிறந்த பாசனம் மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வருகிறது. இந்த வாய்க்காலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் மற்றும் குப்பைகள் மண்டி கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த நீர்வளத்துறை அதிகாரிகள் வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்தி சரி செய்தனர்.

கோரிக்கை

ஆனால் கடந்த மூன்று மாத காலமாக மீண்டும் கொள்ளிடம் பகுதியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து இந்த வாய்க்காலில் தினந்தோறும் கழிவு நீர் வெளியேற்றப்படுவதுடன் மக்கும் மற்றும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த வாய்க்காலில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தொடர்ந்து தேங்கிடக்கிறது.

கொசுக்கள் மற்றும் ஈக்கள் லட்சக்கணக்கில் உருவாகும் இடமாகவும் இந்த வாய்க்கால் மாறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுப்புற சுகாதாரம் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வடிகால் வாய்க்காலில் கழிவு நீர் வெளியேற்றப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொள்ளிடம் பகுதி மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story