மாநிலங்களவையில் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கியவர் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களவையில் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கியவர் மு.க.ஸ்டாலின் நாமக்கல்லில் நடந்த மாநாட்டில் ராஜேஸ்குமார் எம்.பி. பேசினார்.
மாநிலங்களவையில் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கியவர் மு.க.ஸ்டாலின் நாமக்கல்லில் நடந்த மாநாட்டில் ராஜேஸ்குமார் எம்.பி. பேசினார்.
ராஜேஸ்குமார் எம்.பி.
நாமக்கல்லில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. அதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டிற்காக முதன்முதலாக அமைச்சர் நேரு, என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உடனடியாக இடத்தை தேர்வு செய்து, அதற்கான ப்ளூ பிரிண்ட் போட்டுக் கொண்டு நீங்களும், அமைச்சரும் முதல்-அமைச்சரை வந்து சந்தியுங்கள் என கூறினார். அதன் பிறகு முதல்-அமைச்சரை நாங்கள் சந்தித்தோம்.
அப்போது எங்களைப் பார்த்து இந்த இடத்திற்கு முறையாக அனுமதி வாங்கினீர்களா, இடத்தின் உரிமையாளரிடம் ஒப்புதல் கடிதம் பெற்றீர்களா? என கேட்டார். அந்த அளவுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். மாநாட்டுக்காக பந்தல் அமைக்கும் போது, மின்சார கம்பத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது முதல்-அமைச்சர் கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, முறையாக மின்சாரத் துறையில் பணம் செலுத்தி கம்பத்தை அகற்றினோம்.
திராவிட மாடல்
முதல்-அமைச்சருக்கு பல அடையாளங்கள் உண்டு. அதில் போராளி என்பது மிக பெரிய அடையாளம். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றவர். அருந்ததியர் சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஒரு சவால் வந்தபோது, சுப்ரீம் கோர்ட்டு சென்று அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்தினார்.
மக்களவையில் இட ஒதுக்கீடு உள்ளது. உள்ளாட்சியிலும் இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் மாநிலங்களவையில் இடஒதுக்கீடு கிடையாது. அதிலும் சமூகநீதியை காத்து அனைத்து மதம் மற்றும் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கியவர் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இடஒதுக்கீடு இல்லாத மாநிலங்களவையிலும் இடஒதுக்கீட்டை தந்த ஒரே தலைவர் நமது முதல்-அமைச்சராவார். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
இவ்வாறு ராஜேஸ்குமார் எம்.பி. பேசினார்.