அண்ணாவினால் சட்டமாக்கப்பட்டதால் சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கின்றன- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அண்ணா சீர்திருத்த திருமணங்களை சட்டமாக்கியதால் இன்று தமிழ்நாட்டில் சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கின்றன என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அண்ணா சீர்திருத்த திருமணங்களை சட்டமாக்கியதால் இன்று தமிழ்நாட்டில் சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கின்றன என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருமண விழா
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆ.செந்தில்குமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம் ஆகியோரின் இல்ல திருமணம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு வரவேற்பு விழா ஈரோடு அருகே மேட்டுக்கடையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்கள் குட்டிமணி என்கிற ஜெ.கோவேந்தன்-ம.ராஜநந்தினி ஆகியோருக்கு மலர் மாலை எடுத்துக்கொடுத்து, மாலை மாற்றச்செய்து, வாழ்த்தினார்.
இந்த விழாவுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுயமரியாதை உணர்வுடன்
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-
நாளை (இன்று) காலை சீர்திருத்த திருமணமாக இந்த திருமணம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க என்னை அழைத்தபோது, நானே மனம் உவந்து விழாவில் கலந்து கொள்வதாக சம்மதம் தெரிவித்தேன். இந்தநிலையில் நாளை (இன்று) திண்டுக்கலில் நடைபெற உள்ள, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் என்ற முறையில் நானும் பங்கேற்கிறேன். எனவே இந்த திருமணத்துக்கு முன்கூட்டியே வருவதாக கூறி, எனது உடல் நிலை பிரச்சினை இருந்தாலும் இங்கு வந்து கலந்து கொண்டிருக்கிறேன்.
இது சீர்திருத்த திருமணம். சீர்திருத்த திருமணங்கள் நடைபெற தொடங்கிய காலத்தில் இதை கேலி, கிண்டல் செய்தவர்கள், கொச்சைப்படுத்தி பேசியவர்கள் இருந்தனர். 1967-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக அண்ணா இருந்தபோது, சீர்திருத்த திருமணத்தை சட்டப்படி செல்லும் என்று அறிவித்தார். எனவே இன்று தமிழ்நாட்டில் சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணங்கள் நடைபெறவில்லை என்றால்தான் ஆச்சரியம். இது பெரியார் பிறந்த மண். கருணாநிதியின் குருகுலம். இங்கு அவருக்கு 3 சிலைகள் உள்ளன. அது 300 ஆக உயரும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. மூத்த தலைவர் அ.கணேசமூர்த்தி எம்.பி., தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
தேர்தல் நிதி
விழாவில் ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாச்சலம், திருமகன் ஈவெரா, தி.மு.க. நிர்வாகிகள் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தன், குமார் முருகேஸ், முன்னாள் எம்.பி. கந்தசாமி, வடக்கு மாவட்டசெயலாளர் நல்லசிவம், தமிழ்நாடு அரசு கேபிள் தலைவர் குறிஞ்சி சிவக்குமார், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் செல்லப்பொன்னி, ப.சீ.நாகராஜன், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்தும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மண மக்களின் உறவினர்கள் திரண்டு இருந்தனர்.
முன்னதாக மாவட்ட துணை செயலாளர் ஆ.செந்தில்குமார் வரவேற்று பேசியதுடன், 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நிதியாக ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்து 555 தொகையை வழங்கினார். அதை முதல்-அமைச்சர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, அவர் பேசும்போது, 'நான் எதிர்பாராமல் இந்த தொகை கிடைத்து உள்ளது. செந்தில்குமாரின் கைராசியால் நிதி குவியும்' என்று குறிப்பிட்டார்.அண்ணாவினால் சட்டமாக்கப்பட்டதால் சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கின்றன- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பிரமாண்ட மேடை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி, திருமணம் நடைபெறும் மண்டப வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மேடையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழுஉருவச்சிலையும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், முதல்-அமைச்சர் வருவதற்கு முன்னதாக திடீரென்று வானம் இருண்டு மழை கொட்டியதால் மண்டபத்துக்குள்ளேயே நிகழ்ச்சி நடந்தது.