கனிமவள லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் மீது கும்பல் தாக்குதல்


கனிமவள லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் மீது கும்பல் தாக்குதல்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை ஒரு கும்பல் திடீரென தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குழித்துறை,

கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை ஒரு கும்பல் திடீரென தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

லாரிகளில் கனிம வளங்கள்

குமரி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கனிம வளத்தை ஏற்றியபடி ஏராளமான லாரிகள் மார்த்தாண்டம் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்கிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் விதிகளை மீறி கூடுதலாக கனிம வளத்தை ஏற்றி செல்லும் லாரிகளை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கை போதாது எனவும், இங்குள்ள கனிம வளங்களை கேரளாவுக்கு கொண்டு செல்லக்கூடாது எனவும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர். மேலும் இரவு நேரத்தில் தொடர்ந்து கேரளாவுக்கு செல்லும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பதோடு, அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மார்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியில் கனிம வளங்களை ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்களும், இளைஞர்களும் சேர்ந்து தடுத்து நிறுத்தினர்.

இங்குள்ள கனிம வளங்களை கேரளாவுக்கு கொண்டு செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கனிம வளங்களை ஏற்றி வந்த லாரிகள் வரிசையாக அணிவகுத்து நின்றன.

திடீர் தாக்குதல்

அப்போது பொதுமக்களுக்கும், லாரி டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் டிரைவர்களுடன் வந்த சிலர் கும்பலாக வந்து பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்பினருக்கும் இடையே மோதலாக மாறி கைகலப்பில் முடிந்தது. அப்போது லாரிகளில் வந்த கும்பல் இளைஞர்களை விரட்டி, விரட்டி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பற்றி கேள்வி பட்டதும் மார்த்தாண்டம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அந்த சமயத்தில் போலீசார் முன்னிலையிலேயே தாக்குதல் சம்பவம் தொடர்ந்தது. பின்னர் இருதரப்பினரையும் போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இதன் பிறகு தான் அங்கு பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இந்த சம்பவத்தால் கனிம வளங்களை ஏற்றிய லாரிகள் அணிவகுத்தபடி நின்றன. போராட்டக்காரர்கள் கலைந்து சென்றதை தொடர்ந்து கனிம வள லாரிகள் ஒவ்வொன்றாக கேரளாவுக்கு புறப்பட்டு சென்றன.

பரபரப்பு

கனிமவள லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்களை கும்பல் தாக்கிய சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசுக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பி உள்ளனர்.


Next Story