ஓட்டல் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு


ஓட்டல் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு
x

தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் ஓட்டல் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ஒரு கும்பல் செல்போனை பறித்து சென்றது. இதில் ஸ்கூட்டரில் தப்பிய சிறுவனை போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்தனர். 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் ஓட்டல் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ஒரு கும்பல் செல்போனை பறித்து சென்றது. இதில் ஸ்கூட்டரில் தப்பிய சிறுவனை போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்தனர். 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

செல்போன் பறிப்பு

தஞ்சையை அடுத்துள்ள பூதலூர் கக்கனூர் மேலகாலனியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன்(வயது30). இவர் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.நேற்றுமுன்தினம் மாலை செந்தமிழ்செல்வன் வேலை முடிந்து திருச்சியில் இருந்து பஸ் மூலம் செங்கிப்பட்டிக்கு வந்தார்.செங்கிப்பட்டி பஸ் நிலையத்தில் இறங்கி அவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மஞ்சள் நிற ஸ்கூட்டரில் வந்த 3 பேர் செந்தமிழ்ச்செல்வனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவருடைய செல்போனை பறித்து சென்றனர்.

சினிமா பாணியில்

இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தமிழ்செல்வன் இது குறித்து செங்கிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதன்பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணி மேற்கொண்டு வந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது செல்போனை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் சென்ற ஸ்கூட்டரை போலீசார் அடையாளம் கண்டு சினிமா பாணியில் துரத்தி சென்றனர்.பின்னர் திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 3 பேரில் பின்னால் உட்கார்ந்திருந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். இருவர் ஸ்கூட்டருடன் தப்பி சென்று விட்டனர்.

கைது

பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிய வந்தது.இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story