தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மிதமான மழை பெய்தது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுவடையக்கூடும். மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 8-ந் தேதி வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என்றும், அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் லேசானமழை பெய்தது. சாத்தான்குளத்தில் -12 மில்லி மீட்டரும், திருச்செந்தூர் -11, காயல்பட்டினம் -16, குலசேகரன்பட்டினம்-18, சாத்தான்குளம் -3, கோவில்பட்டி -4, கழுகுமலை -3, கயத்தாறு -3, கடம்பூர் -5, எட்டயபுரம் -3.2, விளாத்திகுளம் -9, சூரங்குடி -10, வைப்பார் -14 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மழை
நேற்று காலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பின்னர் கடும் வெயில் அடித்தது. மாலை 5 மணிக்கு பிறகு வானம் மீண்டும் மேகமூட்டமாக இருந்தது. இரவு 7 மணிக்கு லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை மெல்ல மெல்ல வலுத்தது. இந்த மழை 7.45 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடியது. இப்பகுதிகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி நடந்தது.