ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம்; 10, 24-ந் தேதிகளில் நடக்கிறது


ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம்; 10, 24-ந் தேதிகளில் நடக்கிறது
x

கரூர், குளித்தலை அரசு மருத்துவமனைகளில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம் வருகிற 10, 24-ந் தேதிகளில் நடக்கிறது.

கரூர்

கரூர் மற்றும் குளித்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்க தந்தை திட்டத்தின் கீழ் ஜூன் மாதம் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வருகிற 10-ந்தேதியும், குளித்தலை அரசு மருத்துவமனையில் வருகிற 24-ந்தேதியும் குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம்கள் நடைபெற உள்ளன. அதில் தகுதி உள்ள ஆண்களுக்கு நவீன முறையில் கருத்தடை சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர்களால் செய்யப்படும். ஆண்களுக்கான நவீன கருத்தடை முறை எளிமையானது, பாதுகாப்பானது. மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. ஆண்மை குறைவு இல்லாதது. ஒரு சில நிமிடங்களில் செய்யப்படுகிறது. அன்றாட வேலைகளை வழக்கம் போல் செய்யலாம்.

குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஏற்கும் ஆண்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மேலும் தகுதியின் அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா, வீட்டில் உள்ள முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை, சிறு, குறு நடுத்தர தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை வங்கி கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்கள், இலவச கால்நடை கொட்டகை, சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் நுண்ணீர் பாசனம் போன்ற திட்டங்களில் ஏதாவது ஒன்று வழங்கப்படும். இதுவரை இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 114 பேர் கருத்தடை சிகிச்சை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றுள்ளனர். கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் தொடர்பாக 94439 42304, 99445 23334 மற்றும் 94439 04031 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story