சென்னையில் வாகன ஓட்டிகளை அலற வைக்கும் நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள்


சென்னையில் வாகன ஓட்டிகளை அலற வைக்கும் நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள்
x

சென்னையில் விதிகளை மீறும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அபராத ரசீதை அனுப்பி, வாகன ஓட்டிகளை நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் அலற வைக்கிறது.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் 31-ந்தேதி அன்று 2 நவீன நடமாடும் கண்காணிப்பு வாகனங்களை அறிமுகம் செய்தனர். இந்த வாகனங்களில் 360 டிகிரி சுழலக்கூடிய ஏ.என்.பி.ஆர். நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு வாகனத்தின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

தற்போது சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து போலீசாருக்கும், கிழக்கு மண்டல போக்குவரத்து போலீசாருக்கும் இந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 31-ந்தேதி அன்று இந்த வாகனங்களின் செயல்பாட்டை கொடியசைத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சூழலும் கேமராக்கள் விதிகளை மீறி வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகளை தத்ரூபமாக படம் பிடிக்கிறது.

இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவியில் 12 வகையான விதிமீறல்கள் பற்றியும், அதற்கான அபராத தொகைகள் பற்றியும் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக 'ஹெல்மெட்' அணியாமல் செல்வது, ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வது, செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டி செல்வது, அதிவேகமாக வாகனங்களை இயக்குவது போன்ற விதிமீறல்கள் குறித்து இந்த வாகனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 டி ரேடார்

விதிமீறல்களை மீறும் வாகனங்களை படம் பிடிக்க '2 டி ரேடார்' அமைப்பு இந்த வாகனத்தில் உள்ளது. விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை இந்த 'ரேடார்' கருவிகள் நவீன கேமரா மூலம் படம் பிடித்து அந்த வாகனங்களின் பதிவெண்ணை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி சரி பார்க்கும். உடனடியாக குறிப்பிட்ட வாகனத்தின் பதிவெண்ணை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் உள்ள ஆவணத்திலும் ஆய்வு செய்யும்.

அதன் மூலம் குறிப்பிட்ட வாகனத்தின் உரிமையாளரின் முகவரி மற்றும் செல்போன் எண்ணை கண்டுபிடிக்கும். அடுத்து இந்த தகவல் தேசிய தகவல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து விதிமீறலுக்கான அபராத தொகைக்கான 'இ-சலான்' குறிப்பிட்ட வாகன ஓட்டியின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) மூலம் அனுப்பி வைக்கப்படும்.

வாகன ஓட்டிகள் அலறல்

படம் பிடித்தவுடன் இந்த அபராத சலான் வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தென்னிந்தியாவிலேயே சென்னையில்தான் இது போன்ற நவீன கண்காணிப்பு கேமரா வாகனங்கள் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் போலீஸ் அதிகாரிகள் பெருமிதத்துடன் கூறினார்கள். இது போன்ற அதிரடியாக அபராத சலான் அனுப்பும் புதிய முறை வாகன ஓட்டிகளை அலற வைத்துள்ளது.

நாம் இது போன்ற விதிமீறல் குற்றத்தில் ஈடுபட்டோமா? என்று வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஆனால் உரிய புகைப்பட ஆதாரத்தோடு அபராத சலான் அனுப்பப்படுவதால் வாகன ஓட்டிகளால் இந்த தொகையை கட்டுவதை தவிர வேறு வழியில்லை.

ஈ.சி.ஆர்., மெரினா காமராஜர் சாலை

இந்த 2 கண்காணிப்பு வாகனங்களில் ஒன்று கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து சென்று கொண்டிருக்கும். இன்னொரு வாகனம் மெரினா கடற்கரை காமராஜர் சாலையை கண்காணிக்கிறது. விரைவில் இது போன்ற நவீன ரோந்து வாகனம் வடக்கு மண்டலத்திலும் செயல்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 31-ந்தேதி அன்று இந்த 2 வாகனங்களும் தங்களது கண்காணிப்பு வேலையை தொடங்கியது. நேற்று வரையில் இந்த கண்காணிப்பு வாகனங்களின் வலையில் 3 ஆயிரத்து 374 வாகனங்கள் சிக்கி உள்ளன. உடனடியாக அந்த வாகன ஓட்டிகள் செய்த விதிமீறலுக்கு அபராத தொகையுடன் ரசீது அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு இந்த நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் ஒரு சவாலாகவே விளங்குவதாக அறியப்பட்டுள்ளது.


Next Story