குறுவை சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களைபயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் குறுவை சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் குறுவை சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குறுவை சாகுபடி
நெல் சாகுபடியில் மற்ற பருவங்களை விட குறுவையில் கூடுதல் மகசூல் பெறுவதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளதால் ஆழ்குழாய் வசதி கொண்ட விவசாயிகள் தற்போது நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளனர். பட்டுக்கோட்டை வட்டாரத்திற்கு நடப்பு குறுவை பருவத்தில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் நடவுப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டும். குறுகிய கால ரகங்களான ஆடுதுறை 37, ஆடுதுறை 53, ஏ.எஸ்.டி. 16, டி.பி.எஸ். 5 மற்றும் கோ 51 போன்ற குறைந்த வயதுடைய ரகங்களின் சான்று பெற்ற விதைகளை குறுவை பருவத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
விதை நேர்த்தி
விதை நேர்த்தி செய்யும் போது 10 கிராம் சூடோமோனஸ் கலந்த தண்ணீரில் ஒரு கிலோ விதையை ஊற வைத்து விதையால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும். நாற்றங்கால் தயாரிப்பில் 1 சென்டிற்கு 2 கிலோ வீதம் என்ற அளவில் டி.ஏ.பி. உரம் இடவேண்டும். இளம் நாற்றுகளை 15 முதல் 20 நாட்களில் நட வேண்டியது அவசியம். உயிர் உரங்கள் பயன்படுத்தும் போது நடவுக்கு முன் நாற்றுகளை தலா 150 மி.லி. அசோஸ்பைரில்லம், 150 மி.லி. பாஸ்போ பாக்டீரியம் மற்றும் 1 கிலோ சூடோமோனஸ் கரைசலில் நாற்றின் வேர்களை நனைத்த பின்னர் நட வேண்டும்.
அதேபோன்று ஒரு ஏக்கருக்கு 200 மி.லி. அசோஸ்பைரில்லம், 200 மி.லி பாஸ்போ பாக்டீரியாவுடன் 25 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் மற்றும் ஒரு கிலோ சூடோமோனஸ் உடன் கலந்து இட வேண்டும்.
இலை சுருட்டுப்புழு
குறுவையில் நெல் பயிரின் முக்கிய பூச்சிகளான இலை சுருட்டுப்புழு, ஆனைக்கொம்பன் மற்றும் குருத்துப் பூச்சிகளை கட்டுப்படுத்த 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு அல்லது 3 சதவீதம் வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும். இலைசுருட்டுப்புழு மற்றும் குருத்துப் பூச்சிகள் பொருளாதார சேத நிலையை கடந்து தாக்கும் போது மட்டுமே ரசாயன பூச்சிக்கொல்லிகளை ஏக்கருக்கு 60 மி.லி. குளோரான்டிரானிலிபுரோல் மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
ஆணைக்கொம்பன் பொருளாதார சேத நிலையை கடந்து தாக்கும் போது மட்டுமே ரசாயன பூச்சிக்கொல்லிகளை ஏக்கருக்கு தளோமீத்தாக்சம் 40 கிராம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். எனவே குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் மேற்கண்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.