மொய் விருந்து களைகட்ட தொடங்கியது


மொய் விருந்து களைகட்ட தொடங்கியது
x

வடகாடு பகுதியில் மொய் விருந்துகள் களைக்கட்ட ஆரம்பித்துள்ளது.

புதுக்கோட்டை

மொய் விருந்து

வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கலாசாரம் மற்றும் கவுரவ விழாவாக கருதப்படும் மொய் விருந்து விழாக்கள் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மும்முரமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சற்று முன்னதாகவே அதாவது ஆனி மாதத்திலேயே தொடங்கி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

இதற்கு காரணம் கடந்த 3 ஆண்டுகளாகவே கொரோனா பெருந்தொற்று தடையால் சரிவர மொய் விருந்து விழாக்களை நடத்த முடியாமல் விழா ஏற்பாட்டாளர்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் ஒரு நபர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மொய் விருந்து விழா நடத்த வேண்டும் என்பது நடைமுறையாகும். அதனால் கடந்த 2017-ம் ஆண்டு மொய் விருந்து விழா நடத்தியவர்கள் தற்போது நடப்பாண்டில் இதை நடத்தி வருகின்றனர்.

நகைகள் அடமானம் வைத்து

கொரோனா பெருந்தொற்று பயம் காரணமாகவே சற்று முன்னதாகவே தொடங்கி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்விழா மூலமாக, இப்பகுதிகளில் ஆண்டு தோறும் கோடி கணக்கில் வர்த்தகம் நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாகவே கஜா புயல், கொரோனா பெருந்தொற்று, பருவம் தவறி பெய்த மழை உள்ளிட்டவைகளால் விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி இருந்ததாலும், வணிக ரீதியாக பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. எனினும் இப்பகுதி மக்களின் கவுரவ பிரச்சினை என்பதால் எப்படியும் செய்த மொய் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்பதாலும், இப்பகுதிகளில் உள்ள வங்கிகள் அனைத்திலும் தங்களது நகைகளை அடமானம் வைக்க மக்கள் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

மேலும் ஆண்டு தோறும் இப்பகுதிகளில் உள்ள வங்கிகள் அனைத்திலும் இப்பகுதி மக்களின் அடமான தங்க ஆபரணங்கள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ இவ்விருந்து விழாக்கள் மூலமாக அசைவ உணவுகள் மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், அச்சு மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், வாழை இலை விற்பனை, மொய் நோட்டு மற்றும் எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.


Next Story