ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.9½ லட்சம் மோசடி-வேளாண் அலுவலர் மீது வழக்கு
தர்மபுரி:
ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.9½ லட்சம் மோசடி செய்த வேளாண் அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ரூ.9½ லட்சம்
தர்மபுரி மாவட்டம் தா.குளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா. இவருடைய மகன் அன்பு. எம்.ஏ. பி.எட். பட்டதாரி. இவருக்கு, ஐகோர்ட்டில் இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாக தர்மபுரி வேளாண் விரிவாக்க மையத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் வேடியப்பன் திட்டு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கூறியதாக தெரிகிறது.
இதனால் அன்பு 3 தவணைகளில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்தை, ஆறுமுகத்திடம் வழங்கி உள்ளார். ஆனால் ஆறுமுகம் தான் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை.
வழக்குப்பதிவு
இதனால் பணத்தை திருப்பி கேட்டபோது ஆறுமுகமும், இவருடைய மனைவி கவிதாவும், அன்புவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாகவும், அந்த பணத்தை திரும்ப பெற்று தரக்கோரியும் அன்புவின் தாய் நிர்மலா தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆறுமுகம், கவிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.