ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ.65 ஆயிரம் மோசடி
ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ.65 ஆயிரம் மோசடி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள இரணியன் வலசை பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் பவித்ரன் (வயது22). இவர் மெரைன் என்ஜீனியரிங் படித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்தநிலையில் அவரின் முகநூல் பக்கத்தில் பார்த்து கொண்டிருந்தபோது அதில் கப்பலில் துப்புரவு மேற்பார்வையாளர் பணி உள்ளதாக வந்த அறிவிப்பை கண்டார். இதனை தொடர்ந்த அந்த பணியில் சேர விரும்பிய பவித்ரன் அந்த விளம்பத்தில் வந்த எண்ணிற்கு விபரங்களை அனுப்பி உள்ளார். மறுநாள் அவரை தொடர்பு கொண்டு பேசிய நபர் மேற்கண்ட பணியில் சேர விருப்பமா என்று கேட்டுள்ளார். முழு விருப்பம் என்று தெரிவித்ததும் 650 டாலர் சம்பளம் என்றும் அதற்கு சர்வீஸ் தொகையாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். பவித்ரன் குடும்ப சூழ்நிலை காரணமாக பாதி தொகையை செலுத்துவதாகவும் மீதி தொகையை ஒரு மாதம் கழித்து மீதம் தொகையை தருவதாக கூறி உள்ளார். முதலில் மறுத்த மர்ம நபர்கள் ரூ.65 ஆயிரம் செலுத்தும்படியும் மீதம் தொகையை சொன்னபடி செலுத்திவிட வேண்டும் என்றும் ஏனெனில் தகுதியான நபர்கள் பணத்துடன் வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.
அதனை ஏற்று பவித்ரன் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் செலுத்தி உள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் கோவாவிற்கு வருமாறு கூறியதை தொடர்ந்து விமானத்தில் சென்னை சென்ற பவித்ரன் அவர்கள் அனுப்பிய கடிதத்தினை வைத்து கோவா சென்றபோது மீதம் உள்ள பணம் ரூ.15 ஆயிரத்தை செலுத்தும்படி கூறியதால் அதனையும் செலுத்தி உள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பவித்ரன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.