வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை-விண்ணப்பிக்க 28-ந் தேதி கடைசி நாள்
தர்மபுரி:
படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
உதவித்தொகை
படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு தமிழக அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு தலா ரூ.300, தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு தலா ரூ.600, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டுக்கு தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
ஆண்டு வருமானம்
விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவடைந்து இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 1.1.2023 அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்து இருக்க கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் நேரடியாக படித்து கொண்டிருக்கக்கூடாது. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித்தொகையை பெற முடியாது.
சுய உறுதிமொழி ஆவணம்
உதவித்தொகையை பெற முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உடையவர்கள் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட கணக்கு புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் வருகிற 28-ந் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
விண்ணப்பங்களை தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளிக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று 3 ஆண்டு காலம் நிறைவு பெறாது சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காதவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பித்து தொடர்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.