ஆன்லைனில் ரூ.2½ லட்சம் தருவதாக கூறி கொத்தனாரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரம் அபேஸ்; சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்


ஆன்லைனில் ரூ.2½ லட்சம் தருவதாக கூறி கொத்தனாரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரம் அபேஸ்; சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்
x

ஆன்லைனில் ரூ.2½ லட்சம் தருவதாக கூறி கொத்தனாரின் வங்கிக்கணக்கில் இருந்து அபேஸ் செய்யப்பட்ட ரூ.25 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

திண்டுக்கல்

ஆன்லைனில் ரூ.2½ லட்சம் தருவதாக கூறி கொத்தனாரின் வங்கிக்கணக்கில் இருந்து அபேஸ் செய்யப்பட்ட ரூ.25 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

ரூ.25 ஆயிரம் அபேஸ்

திண்டுக்கல்லை அடுத்த சாலையூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 42). கொத்தனார். இவருடைய செல்போனுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய பெண், ஆன்லைனில் குறைந்த வட்டியில் ரூ.2½ லட்சம் கடன் கொடுப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி கொண்டிருந்த பழனிசாமி கடன் வாங்க சம்மதித்தார்.

இதையடுத்து ஆதார், ரேஷன்கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து, அந்த பெண் கூறிய செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார். பின்னர் ரூ.2½ லட்சம் கடன் பெற வேண்டும் என்றால், வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரம் இருப்பு இருக்க வேண்டும் என்று பெண் தெரிவித்தார். இதனால் பழனிசாமி தனது வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரத்தை செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தார்.

உடனே ஏ.டி.எம். கார்டின் இரு பக்கங்களையும் புகைப்படம் எடுத்து அனுப்பும்படி பெண் கூறினார். அதன்படி ஏ.டி.எம். கார்டின் புகைப்படத்தை அனுப்பியதும், பழனிசாமியின் செல்போனுக்கு வந்த கடவுசொல்லை தெரிவிக்கும்படி பெண் கேட்டார். அதையும் பழனிசாமி தெரிவித்துவிட ஒருசில நொடிகளில் அவருடைய வங்கி கணக்கில் இருந்த ரூ.25 ஆயிரம் மாயமாகிவிட்டது. ஏ.டி.எம். கார்டில் இருந்த ரகசிய எண்ணை பயன்படுத்தி அந்த பெண் பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.

போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்

இதுகுறித்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் அருண்நாராயணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் வடமாநிலத்தில் இருந்து அந்த பெண் பேசியது தெரியவந்தது. எனினும் பழனிசாமியின் பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

அந்த பணத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பழனிசாமியிடம் நேற்று வழங்கினார். மேலும் 3 நாட்களில் பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசாரையும் அவர் பாராட்டினார்.


Next Story