அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறிதனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.27.64 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி
பகுதி நேர வேலையில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.27 லட்சத்து 64 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி சிவசக்தி நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 38). இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 8-ந் தேதி இவரது செல்போனின் வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் பகுதி நேர பணியாற்றினால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது.
அதை நம்பி பாஸ்கரன், அதில் கூறப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய அந்த நபர் வங்கி கணக்குகளுக்கு நடைமுறை செலவுகளுக்காக ரூ.27 லட்சத்து 64 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். இதையடுத்து அந்த நபர் கூறி வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பினார்.
போலீசார் விசாரணை
அந்த தொகையை பெற்ற பிறகு பாஸ்கரன் எண்ணிற்கு எந்த தகவலும் வரவில்லை. இதைத் தொடர்ந்து அவர் அதில் கூறப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாஸ்கரன் இந்த பணம் மோசடி குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.