வியாபாரியிடம் ரூ.8 லட்சம், 4½ கிலோ வெள்ளி மோசடி
சேலத்தில் வியாபாரியிடம் ரூ.8 லட்சம், 4½ கிலோ வெள்ளி மோசடி செய்ததாக வடமாநிலத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலத்தில் வியாபாரியிடம் ரூ.8 லட்சம், 4½ கிலோ வெள்ளி மோசடி செய்ததாக வடமாநிலத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வெள்ளி வியாபாரி
சேலம் செவ்வாய்பேட்டை சையத் மாதர் தெருவை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 32). வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே வடமாநிலத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகளான பிரவீன் ஜாதவ், சஞ்சய் ஜாதவ் வசித்து வந்தனர். இவர்கள் வெள்ளி உருக்கும் தொழில் செய்து வருகின்றனர்.
வீட்டின் அருகே உள்ளதால் கார்த்திக்குடன் அவர்கள் பல ஆண்டுகளாக நண்பர்களாக பழகி உள்ளனர். இந்த நிலையில் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்று கூறி அவர்கள் கார்த்திக்கிடம் பணம், வெள்ளிக்கட்டியை கேட்டனர். இதை நம்பி கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பல தவணைகளில் ரூ.8 லட்சம், 4½ கிலோ வெள்ளி ஆகியவற்றை அண்ணன்-தம்பி உள்பட 4 பேரிடம் கொடுத்து உள்ளார்.
தலைமறைவானது தெரிந்தது
இந்த நிலையில் பணம் மற்றும் வெள்ளியை திரும்ப தரும்படி கார்த்திக் அவர்களிடம் பல முறை கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் காலம் தாழ்த்தினர். இந்த நிலையில் அவர்களது கடைக்கு சென்று பார்த்த போது கடை பூட்டப்பட்டு அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து ரூ.8 லட்சம் மற்றும் வெள்ளிக்கட்டி மோசடி செய்ததாக பிரவீன் ஜாதவ், சஞ்சய் ஜாதவ் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்திக் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.