கடன் தருவதாக கூறி பணம் மோசடி; வாலிபர் கைது


கடன் தருவதாக கூறி பணம் மோசடி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறி பணம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 40), கார் டிரைவர். இவரை கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடர்புகொண்டு பேசிய மர்ம நபர், தான் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அந்நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறியும் நூதன முறையில் அமிர்தலிங்கத்திடமிருந்து ரூ.49 ஆயிரத்தை பெற்று மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து அமிர்தலிங்கம், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அமிர்தலிங்கத்திடம் இருந்து கடன் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்தவர், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் நடராஜன் (22) என்பது தெரிந்தது. இதையடுத்து நடராஜனை போலீசார் மடக்கிபிடித்து விசாரணை நடத்தியதில் அவர், விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஜெயகாந்தி என்பவரிடமும் இதுபோன்று ரூ.25 ஆயிரத்தை மோசடி செய்திருப்பதும், மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நூதன முறையில் பேசி ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நடராஜனை போலீசார் கைது செய்தனர்.


Next Story