போலி ஆவணம் தயாரித்து நிதி நிறுவனத்தில் ரூ.14¾ லட்சம் மோசடி
எடப்பாடி அருகே போலி ஆவணம் தயாரித்து நிதி நிறுவனத்தில் ரூ.14¾ லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எடப்பாடி அருகே போலி ஆவணம் தயாரித்து நிதி நிறுவனத்தில் ரூ.14¾ லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விவசாயி புகார்
எடப்பாடி அருகே உள்ள குப்பனூர் வடக்கு பூலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 46). விவசாயியான இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கடந்த 2012-ம் ஆண்டு மேட்டூர் ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த உறவினரான விஜயகுமார் என்பவர் என்னிடம் ஈமு கோழிபண்ணை வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றார்.
இதற்காக அவர் என்னிடம் இருந்து கையெழுத்திட்ட ஆதார் அட்டை குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, மின்சார கட்டண பில் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து சில நாட்கள் கழித்து கோழி பண்ணை வைப்பது தற்போது பிரச்சினையாக உள்ளது என்று திடீரென அவர் கூறினார். இதையடுத்து அவரிடம் நான், கொடுத்த ஆவணங்களை திருப்பி கேட்ட போது பிறகு தருகிறேன் என்றார்.
ரூ.14¾ லட்சம் மோசடி
இந்த நிலையில் 2 ஆண்டுகள் கழித்து தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் என்னுடைய வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் நீங்கள் வாங்கிய மானிய கடனுக்கு தவணை தொகை ஏன் கட்டவில்லை என்றனர். அதன் பிறகு விசாரித்த போது என்னுடைய ஆவணங்களை வைத்தும், போலி ஆவணம் தயாரித்தும் அந்த நிதி நிறுவனத்தில் விஜயகுமார் மானியம் பெற்று பழைய லாரி வாங்கியது தெரியவந்தது.
இதற்கு சங்ககிரியை சேர்ந்த ராஜா, நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் நாராயணன், ஜெயக்குமார் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். மொத்தம் ரூ.14 லட்சத்து 76 ஆயிரத்து 308 மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
இந்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரைச்செல்வி விசாரணை நடத்தினார். இதையடுத்து கூட்டுசதி, ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்து போலி கையெழுத்திடல் மற்றும் நம்பிக்கையில் கொடுத்த ஆவணங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி மோசடி செய்தல் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ், விஜயகுமார், ராஜா, நாராயணன், ஜெயக்குமார், சுப்பிரமணியன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.