பஸ்சில் பெண்ணிடம் பணம்திருடிய அக்காள்-தங்கை கைது
கயத்தாறில் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருடிய அக்காள்-தங்கையை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு:
கயத்தாறில் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருடிய அக்காள்-தங்கையை போலீசார் கைது செய்தனர்.
மணிபர்ஸ் திருட்டு
நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர் செய்யது அலி. இவருடைய மனைவி செய்யது அலி பாத்திமா (வயது 39). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மானங்காத்தான் கிராமத்தில் உள்ள உறவினரின் துக்க வீட்டுக்கு செல்வதற்காக தனது தாயார் பாத்திமா சபானியுடன் புறப்பட்டார்.
இவர்கள் 2 பேரும் நெல்லையில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் புறப்பட்டு சென்றனர். அப்போது பஸ்சில் செய்யது அலி பாத்திமாவின் அருகில் இருந்த 2 இளம்பெண்கள் நைசாக அவரது துணிப்பையில் இருந்த மணிபர்சை திருடினர். அந்த மணிபர்சில் ரூ.4,500 மற்றும் ரூ.17 ஆயிரம் மதிப்பிலான செல்போன், ஏ.டி.எம். கார்டு போன்றவை இருந்தன.
அக்காள்-தங்கை
கயத்தாறு பஸ் நிலையத்தில் தாயாருடன் செய்யது அலி பாத்திமா பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர்களது துணிப்பையில் இருந்த மணிபர்ஸ் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆன்டனி திலீப் மற்றும் போலீசார் காரில் அந்த பஸ்சை பின்தொடர்ந்து சென்று கோவில்பட்டியில் மறித்தனர்.
தொடர்ந்து பஸ்சில் செய்யது அலி பாத்திமாவின் அருகில் அமர்ந்து பயணித்த 2 இளம்பெண்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் செய்யது அலி பாத்திமாவின் மணிபர்ஸ் இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவருடைய மனைவிகளான மது (26), பிரியா (23) என்பதும், அக்காள்- தங்கையான இவர்கள் பஸ்சில் சில்லறை நாணயங்களை கீழே போட்டு செய்யது அலி பாத்திமாவின் கவனத்தை திசை திருப்பி அவரது மணிபர்சை நைசாக திருடியதும் தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
மேலும் அதே பஸ்சில் மற்றொரு பெண்ணிடமும் மணிபர்சை திருடியது தெரியவந்து உள்ளது. அதில் ரூ.350 பணம் இருந்தது. இதையடுத்து மது, பிரியா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த பணம், செல்போன் போன்றவற்றை மீட்டனர்.
பின்னர் அவர்கள் 2 பேரையும் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர். கைதான 2 பேரும் திருச்சியில் அழகு நிலையத்தில் பணியாற்றியதும், மது மீது திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
--------