நிதி நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருட்டு


நிதி நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 23 Jun 2023 2:29 AM IST (Updated: 23 Jun 2023 4:12 PM IST)
t-max-icont-min-icon

நிதி நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருட்டுபோனது

திருச்சி

கே.கே.நகர்:

நிதி நிறுவன ஊழியர்

திருச்சி கே.கே.நகர் ரெங்காநகர் 2-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராஜ்முகமதுவின் மகன் வாசிம்அக்ரம் (வயது 33). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வாசிம் அக்ரம் கதவை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தூங்கினார்.

காலையில் ராஜ்முகமது எழுந்து பார்த்தபோது, வாசிம்அக்ரமின் கைப்பை வீட்டின் வெளியே கிடந்தது. இதுபற்றி அவர் தனது மகனிடம் கூறவே அவர் ஓடி வந்து அந்த பையை எடுத்து பார்த்தார். அப்போது, அந்த பையில் வைத்திருந்த ரூ.36 ஆயிரம் மாயமாகி இருந்தது.

ரூ.36 ஆயிரம் திருட்டு

மேலும், வீட்டின் பின்பக்க இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. யாரோ மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்து, அதில் இருந்த ரூ.36 ஆயிரத்தை மட்டும் திருடிவிட்டு பையை அங்கேயே வீசி சென்றது தெரியவந்தது. இதுபற்றி அவர் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்ம நபர்கள் விட்டுச்சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அத்துடன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்று விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

*திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் எட்வின்பிரபு. இவருடைய மனைவி அனிதா (35). இவர்களுக்கு அண்ட்ரூஸ் (12), லாரன்ஸ் (8) என 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு 2 மகன்களுடன் அனிதா வந்திருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று காலை தந்தை வீட்டில் இருந்து 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்ற அனிதா பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகிறார்.

*திருச்சி கே.கே.நகர் தேவராயநகரை சேர்ந்தவர்மரியஅசோக்குமார் (33). சத்திரம் பஸ் நிலைய பகுதிக்கு வந்த இவர் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைவீதிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த மோட்டார் சைக்கிளை மணப்பாறையை சேர்ந்த வடிவேல் (26) திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். வடிவேல் மீது ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story