கொல்லங்கோடு அருகே குருசடியில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
கொல்லங்கோடு அருகே குருசடியில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
கொல்லங்கோடு,
கொல்லங்கோடு அருகே குருசடியில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
குருசடியில் கண்ணாடி உடைப்பு
கொல்லங்கோடு அருகே உள்ள எடப்பாடு பகுதியில் புனித அந்தோணியார் குருசடி உள்ளது. இங்கு காலை, மாலை நேரத்தில் ஆராதனை நடந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் ஒரு சில மீனவர்கள் அந்த வழியாக சென்றனர். அப்போது குருசடியின் முன்பக்க கதவு திறந்த நிலையில் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது கண்ணாடி உடைக்கப்பட்டு ஆங்காங்கே சிதறிய நிலையிலும், பொருட்களும் கிடந்தன.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் பங்குதந்தைக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
உண்டியல் பணம் கொள்ளை
அப்போது இரவு நேரத்தில் மர்மஆசாமிகள் குருசடிக்குள் புகுந்து பொருட்களை சூறையாடியதோடு உண்டியலையும் உடைத்து சென்றுள்ளது தெரியவந்தது.
அதே சமயத்தில் கண்ணாடியை உடைத்த போது மர்மஆசாமிகளை கண்ணாடி குத்தி கிழித்துள்ளது. இதில் வெளியேறிய ரத்தம் குருசடியில் படிந்துள்ளது.
பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் படிந்திருந்த ரத்தத்தையும் எடுத்துக் கொண்டனர்.
மேலும் இதுதொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசடியில் கொள்ளையடித்த மர்மஆசாமிகளை தேடிவருகின்றனர்.