மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பொதுமக்களை தெரு நாய்கள் அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மூங்கில்துறைப்பட்டு,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மூங்கில்துறைப்பட்டு. மாவட்டத்தின் முடிவு எல்லையாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரம்ப எல்லையாகவும் மூங்கில்துறைப்பட்டு விளங்கி வருகிறது. இங்கு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1, தனியார் வங்கிகள், காவல் நிலையம் உள்ளிட்டவைகள் இருப்பதாலும், அரசினர் மேல்நிலைப்பள்ளி இருப்பதாலும் இங்கு அன்றாடம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை ஓட்டல்கள் மற்றும் இறைச்சிக்கடைகளில் உள்ள கழிவுகளையும், குப்பைகளில் கிடக்கும் கழிவு பொருட்களையும் தின்றுவிட்டு தெருக்களில் சுற்றித் திரிகின்றன.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த தெருநாய்களுக்கு முறையாக வெறிநோய் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் அந்த தெரு நாய்கள் கடித்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பல இடங்களில் சாலையின் குறுக்கே நாய்கள் ஓடியதால், மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் விபத்தில் சிக்கும் சம்பவமும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இதனால் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.