அணைகளுக்கான நீர்வரத்தை கண்காணிக்க வேண்டும்
தென்மேற்கு பருவமழையையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கான நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஒருங்கிணைப்பு கூட்டம்
தென்மேற்கு பருவமழை காலத்தில் செய்யவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் அடிப்படையில் மாவட்டத்தில் 84 இடங்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 24 இடங்கள் அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும், 4 இடங்கள் நடுத்தர பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும், 56 இடங்கள் குறைவான பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும் உள்ளன. எனவே மேற்கண்ட இடங்களில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
ஒருவேளை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவித்துவிட்டு மீட்பு பணிகளையும் துரிதமாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் தொற்று நோய் பரவாமல் இருக்க தேவையான உயிர் காக்கும் மருந்துகள் அனைத்தையும் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் சாக்கடை கால்வாய்களை தூர்வாரி பராமரிக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையினர் மாவட்டத்தில் உள்ள அணைகளின் மதகுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மதகுகள் நன்றாக இயங்கும் நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் அணைப்பகுதியில் கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி அணைகளுக்கான நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிடும் நிலை ஏற்பட்டால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி ஒலிப்பெருக்கி, தண்டோரா மூலம் அறிவுறுத்த வேண்டும்.
மணல் மூட்டைகள்
ஆறு, குளங்கள், கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அவற்றை தற்காலிகமாக சீரமைக்க மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். மழையால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் தவிப்பவர்களை மீட்டு தங்க வைக்க சமுதாய கூடங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றை அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்க வேண்டும். மேலும் இந்த பணிகளில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.