கொடைக்கானல் அருகே கூண்டுக்குள் சிக்கிய குரங்குகள்
கொடைக்கானல் அருகே வனத்துறையினர் வைத்திருந்த கூண்டுக்குள் குரங்குகள் சிக்கின.
கொடைக்கானல் அருகே மன்னவனூரில் கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு காய்கறி பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் சமீப காலமாக மன்னவனூரில் உள்ள தோட்டங்களுக்குள் குரங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அட்டகாசம் செய்யும் குரங்குகளை அப்புறப்படுத்தி வனப்பகுதியில் கொண்டுபோய் விட வேண்டும் என்று வனத்துறையினரிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து குரங்குகளை பிடிப்பதற்காக, மன்னவனூர் பகுதியில் உள்ள விளை நிலத்தில் கடந்த 2 நாட்களாக வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இந்தநிலையில் இன்று அந்த கூண்டுக்குள் சுமார் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் சிக்கின. இதைத்தொடர்ந்து அந்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்து, பேரிஜம் வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டனர். இருப்பினும் மீதமுள்ள குரங்குகளையும் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.