வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தும் குரங்குகள்


வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தும் குரங்குகள்
x

திருப்பைஞ்சீலியில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தும் குரங்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

திருப்பைஞ்சீலியில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தும் குரங்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரங்குகள் தொல்லை

மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது திருப்பைஞ்சீலி. இந்த ஊரில் உள்ள நீலிவனநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். கல்வாழை பரிகார ்தலமாகவும் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ள தலமாகவும் விளங்கிவரும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் .கோவில் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இப்படி சுற்றி திரியும் குரங்குகளால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். பூஜை முடித்து வெளியே வரும்போது பழங்கள், தேங்காய்களை பறித்து செல்கின்றன. சில சமயம் பக்தர்களை குரங்குகள் மிரட்டுகிறது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

வீடுகளுக்குள் புகுந்து சேதம்

பகல் நேரங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களை மிரட்டும் குரங்குகள் மாலை நேரங்களில் கூட்டம், கூட்டமாக வீதிகளில் சுற்றி திரிகிறது. மேலும், திறந்து இருக்கும் வீடுகளில் நுழையும் குரங்குகள் அங்கு சமையலறையில் வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் தக்காளி, வாழைப்பழம், காய்கறி உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. இதனால் குரங்குகள் எப்போது வீட்டுக்குள் நுழையுமோ என்ற அச்சத்தில் பெண்கள் உள்ளனர்.

ஓட்டைப்பிரித்து...

மேலும், பெண்கள் 100 நாள் வேலைக்கு செல்லும் நேரங்களில் வீட்டை பூட்டிவிட்டு செல்லும்போது அந்த நேரத்தில் வரும் குரங்குகள் வீட்டின் ஓட்டை பிரித்தும் உள்ளே சென்று பொருட்களை நாசப்படுத்தி விட்டு செல்கின்றன. வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளை கடிக்க வருவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறை அதிகாரிகள் திருப்பைஞ்சீலியில் சுற்றித் திரியும் ஏராளமான குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

திருப்பைஞ்சீலியைச் சேர்ந்த அம்சவள்ளி:-

எனது கணவர் டிரைவர் வேலை பார்த்து வருவதால் வெளியூர் சென்று விடுவார். இந்நிலையில், எனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பத்தி கம்பெனியில் நான் வேலை பார்ப்பதற்காக சென்று விடுவேன். காலையில் வேலைக்காக செல்லும் நான் மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு தொடர்ந்து வேலைக்கு சென்று விட்டு இரவு 6 அல்லது 7 மணிக்கு தான் வீட்டுக்கு வருவேன். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எங்கள் தெருவில் சுற்றித் திரியும் குரங்குகள் எங்கள் வீட்டில் உள்ள சமையலறையில் வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை நாசப்படுத்தி விட்டு செல்கின்றன. இதனால் எங்களுக்கு தேவையில்லாத செலவும் மன உளைச்சலும் ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

வயரை சேதம்படுத்தும்...

திருப்பைஞ்சீலியை சேர்ந்த ராசாத்தி:-

எங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் திருச்சிக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். சிலர் ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு தோட்டத்திற்கு சென்று வருகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் கூலி வேலைக்கு சென்று விடுகிறோம். அந்த நேரத்தில் எங்கள் பகுதியில் வரும் குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்களை கடித்து சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. மேலும் மின்சார வயர்கள் மற்றும் கேபிள் ஒயர்களில் குரங்குகள் தொங்கிக்கொண்டு செல்கின்றன. எனவே குரங்குகளை உடனடியாக பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கரூரை சேர்ந்த மணிமேகலை:- திருப்பைஞ்சீலியில் இருக்கும் எனது பெற்றோரை பார்ப்பதற்காகவும், நீலிவனநாதர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காகவும் அடிக்கடி எனது குடும்பத்தினரோடு வந்து செல்வேன். இங்குள்ள கோவில் மட்டுமல்லாது கடைவீதி, தெருக்கள் என்று எல்லா பகுதிகளிலும் குரங்குகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன.கோவிலுக்கு செல்லும்போது பூஜை பொருட்களை எடுத்துச் செல்கிறோமோ இல்லையோ கையில் ஒரு குச்சியோடு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோவிலுக்கு சென்று சாமியை வணங்கி விட்டு வீட்டிற்கு பூஜை பொருட்களை பத்திரமாக எடுத்துச் செல்வதற்குள் குரங்குகளால் மிகவும் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது.

பக்தர்களுக்கு தொந்தரவு

திருப்பைஞ்சீலியில் டீக்கடைநடத்தி வரும் பிரபாகரன்:-

கோவில் மற்றும் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100-க்கணக்கான குரங்குகள் சுற்றித் திரிவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. கோவிலுக்குள் சென்று சாமியை வணங்கி விட்டு திரும்பும் பக்தர்களின் பின்னாலேயே குரங்குகள் ஓடி வந்து அவர்கள் கையில் வைத்திருக்கும் பழங்களை பறித்துக் கொண்டு செல்லும் போது பெண்கள் மிகவும் வேதனைப்படுகின்றனர்.மேலும் பரிகாரம் செய்துவிட்டு அங்குள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு பக்தர்கள் பிரசாதம் வழங்கும்போது அந்த பிரசாதத்தையும் குரங்குகள் பறித்து சென்று விடுவதால் பக்தர்கள் மிகவும் வேதனை அடைகின்றனர். எனவே குரங்குளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story