மணல் மூட்டைகள் மீது மொபட் மோதல்; பட்டதாரி வாலிபர் பலி


மணல் மூட்டைகள் மீது மொபட் மோதல்; பட்டதாரி வாலிபர் பலி
x

மணல் மூட்டைகள் மீது மொபட் மோதியதில் பட்டதாரி வாலிபர் பலியானார்.

புதுக்கோட்டை

தங்கை திருமணம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 61). இவர் சுகாதாரத்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மகன் கோபி என்கிற கோபால் (27). பட்டதாரியான இவர் வேலை தேடி வந்தார்.

கோபியின் தங்கை மகேஸ்வரிக்கு நேற்று முன்தினம் திருக்கோகர்ணம் பகுதியில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் மதியம் பாலன் நகரில் இருந்து கோபி திருக்கோகர்ணம் நோக்கி மொபட்டில் சென்றார். அப்போது புதுக்கோட்டை-திருச்சி சாலையில் மலையப்ப கருப்பர் கோவில் அருகே சாலையில் வேலை நடைபெற்று வருகிற நிலையில் மணல் மூட்டைகள் மீது மொபட் மோதியது. இதில் நிலைத்தடுமாறி அருகே சாலையோரம் இருந்த தடுப்பில் கோபி மோதி விழுந்தார்.

உறவினர்கள் இடையே சோகம்

இதையடுத்து, படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோபி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கையின் திருமணத்தன்று கோபி இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை- திருச்சி சாலையில் திருக்கோகர்ணம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story