கல்வீசி தாக்கியதில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயம்


கல்வீசி தாக்கியதில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயம்
x

மாடு முட்டி வாலிபர் இறந்த சம்பவத்தில் கல்வீசி தாக்கியதில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதால் கலவரமாக காட்சியளித்தது.

திருப்பத்தூர்

கல்வீசி தாக்குதல்

நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த தவுலத் என்பவரது மகன் முஷாரப் (19) என்ற வாலிபர் மாடு முட்டி இறந்தார். ஆனால் போலீசார் தாக்கியதில் அவர் இறந்ததாகக்கூறி அவரது உறவினர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போலீசாரை சுமார் 5 மணி நேரமாக முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இரவு நேரம் நெருங்க நெருங்க திடீரென ஆத்திரமடைந்த இளைஞர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்க முயன்றனர். இதில் ஆயுதப்படை போலீஸ்காரர் திருமால் காயமடைந்தார்.

சிறைபிடிப்பு- மீண்டும் தடியடி

அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு கணேசனை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.

தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார், அதிவிரைவுப் படை வாகனம், இன்ஸ்பெக்டரின் கார் ஆகியவற்றின் மீது கல்வீசி கண்ணாடிகளை உடைத்தனர். கல்வீசி தாக்கியதில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் மீண்டும் திடீரென தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

பதற்றம் நீடிப்பு

போலீசார் மீது கல்வீசி தாக்கியது தொடர்பாக 35-க்கும் மேற்பட்ட வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எருது விடும் திருவிழாவில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் கலவரமாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் அங்கு திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்ட போலீசார் மற்றும் அதிவிரைவிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story