புகையிலை பொருட்களை விற்றதாக ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோர் கைது
புகையிலை பொருட்களை விற்றதாக ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தடை விதிக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு வந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக அதிரடி வேட்டை நடைபெற்று வருகிறது. மேலும் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். அந்த வகையில் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதில் டவுன், திருக்கோகர்ணம், கந்தர்வகோட்டை, மீமிசல், கோட்டைப்பட்டினம், வடகாடு, கீரமங்கலம், விராலிமலை, அறந்தாங்கி, நாகுடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.