தஞ்சை: வணிகர் சங்க நிர்வாகியை வெட்டிக்கொன்ற கும்பல் - கொந்தளித்த வணிகர்கள்
தஞ்சை அருகே கடைகளில் அரிவாளை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட போது வணிகர் சங்க நிர்வாகி உயிரிழந்ததை கண்டித்து, 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை:
தஞ்சை கரந்தை பகுதியானது எப்போதும் பரபரப்பாக ஆள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடமாகும். இப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் மின்சாரம் தடை ஏற்பட்டது.
அப்போது பைக்கில் வந்த இரு நபர்கள் தஞ்சை கரந்தையில் மளிகைகடை நடத்தி வரும் செந்தில்வேல் மற்றும் மருந்து கடை ஊழியர் முருகானந்தத்தை வெட்டி கல்லாவில் இருந்த ரூ.2,500 பணத்தையும் எடுத்துச்சென்றனர். மேலும் ஒரு வியாபாரியையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கரந்தை ராஜாராமன் மடத்து தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஹரிகரன் (வயது 21), கரந்தை பூக்குளம் பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் தினேஷ்(19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்ப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மளிகை கடை வியாபாரி செந்தில்வேல் நேற்று மாலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரையும் தஞ்சை மேற்கு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
இச்சம்பவத்தை கண்டித்து தஞ்சையின் பல்வேறு பகுதியில் 300 க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அங்குள்ள வணிகர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.