ரூ.4 கோடி செலுத்தி ஏமாந்த 400-க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார்
ரூ.4 கோடி செலுத்தி ஏமாந்த 400-க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார்
ஒரத்தநாட்டில் உள்ள நகை கடையில் ரூ.4 கோடி செலுத்தி ஏமாந்த 400-க்கும் மேற்பட்டோர் போலீசில் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர். இதனால் தலைமறைவாகிவிட்ட நகைகடை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நகை கடை முற்றுகை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே ஒரு நகைகடை செயல்பட்டு வந்தது. இந்த நகை கடையில் தவணை முறையில் பணம் செலுத்தினால் சலுகை அடிப்படையில் நகை வழங்கப்படும் என்றும், மேலும் சில சலுகைகளுடன் கூடிய நகை கடன் வழங்கு திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களை சம்பந்தப்பட்ட நகைக்கடை நிர்வாகம் அறிவித்ததின் பேரில், இந்தத் திட்டத்தில் பெரும்பாலான கிராமபுற பொதுமக்கள் தனித்தனியே பணம் செலுத்தினர்.
இதேபோல் நகையினையும் அடகு வைத்தனர். ஆனால் பணம் செலுத்தியவர்களுக்கும், நகையினை அடகு வைத்தவர்களுக்கும் நகையினை வழங்காமல் நகை கடை நிர்வாகம் காலம் தாழ்த்தியதாலும், கடையின் உரிமையாளரையும் பார்க்க முடியாததால் பணம் செலுத்திய பொதுமக்கள் விசாரித்த போது, நகை கடை உரிமையாளர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.
சாலைமறியல்
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நேற்றுமுன்தினம் சம்பந்தப்பட்ட நகை கடையை முற்றுகையிட்ட சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தருமாறும், அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதனை தொடர்ந்து நேற்று காலை முதல் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் தொடர்புடைய நகை கடையில் பணம் செலுத்தியவர்களும், நகையினை அடகு வைத்தவர்களும் அலை அலையாக திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று 400-க்கும் மேற்பட்டோர் உரிய ரசீது உள்ளிட்ட ஆவணங்களுடன் போலீசில் புகார் அளித்தனர்.
இதன்படி இந்த நகைக்கடையில் பொதுமக்கள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பணம் செலுத்தி இருப்பதும், நகைகளை அடகு வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. பணம் செலுத்தியவர்களும், நகையினை அடகு வைத்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
திரண்ட பொதுமக்கள்
சம்பந்தப்பட்ட நகை கடையில் பணம் செலுத்தியும், நகையினை அடகு வைத்தும் ஏமாந்த பொதுமக்கள் நேற்று மாலை ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பு திரண்டனர். இவர்கள் நகை கடை உரிமையாளரை விரைவாக பிடித்து நாங்கள் செலுத்திய பணத்தையும், நகையினையும் மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
உரிமையாளரைப் பிடிக்க தீவிரம்
இந்த நகைகடையின் உரிமையாளர் மற்றும் அதில் பணியாற்றிய முக்கிய நபர்களையும் தேடி போலீசார் நேற்று அவர்களது வீடுகளுக்கு சென்றனர். ஆனால் அவர்கள் யாரும் வீட்டில் இல்லை. மேலும் அவர்களது வீடுகளும் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் உரிமையாளர் மற்றும் தொடர்புடையவர்களின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதால், கடையின் உரிமையாளர் மற்றும் தொடர்புடைய நபர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஒரத்தநாட்டில் செயல்பட்டு வந்த இதே நகை கடையின் கிளைகள் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி ஆகிய ஊர்களில் செயல்பட்டதும், அங்கும் இதேபோன்று பணம் செலுத்தியவர்களுக்கும், நகையினை அடகு வைத்தவர்களுக்கும் நகையினையும், பணத்தையும் தராததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்களும் போலீசில் புகார் அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.