கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்கவில்லை


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்கவில்லை
x
தினத்தந்தி 18 July 2022 6:01 PM GMT (Updated: 18 July 2022 6:39 PM GMT)

கலவர சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் நேற்று இயங்கவில்லை.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி சாவுக்கு நீதி கேட்டு நேற்று முன்தினம் மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளிகள் ஜூலை 18-ந் தேதி முதல் (அதாவது நேற்று) இயங்காது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் அறிவித்தனர். தனியார் பள்ளிகள் சங்கங்கள் தாங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுக்கொள்வது சட்டவிதியை மீறும் செயலாகும் என்பதால் தனியார் பள்ளிகள் இயங்க வேண்டும் என்றும் மீறி விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை உத்தரவிட்டது.

மூடிகிடந்த பள்ளிகள்

ஆனால் கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த வன்முறை சம்பவம் மற்ற தனியார் பள்ளி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவம் தொடரும்பட்சத்தில் பள்ளியை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்று அவர்கள் கருதியதால் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.

மாவட்டத்தில் 57 நர்சரி தனியார் பள்ளிகள், 35 மெட்ரிக் பள்ளிகள், 7 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 99 தனியார் பள்ளிகள் உள்ள நிலையில் ஒன்றிரண்டு பள்ளிகளே திறந்திருந்தன. பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

விழுப்புரம்-கடலூர்

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தமட்டில் 89 மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 140 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், 26 சி.பி.எஸ்.இ. பள்ளிகள், 19 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 274 பள்ளிகள் உள்ள நிலையில் நேற்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கின.

கடலூர் மாவட்டத்தில் 152 மெட்ரிக் பள்ளிகளில் 134 பள்ளிகள் இயங்கின. 18 பள்ளிகள் திறக்கப்படவில்லை. 243 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் 225 பள்ளிகள் இயங்கின. 18 பள்ளிகள் திறக்கப்படவில்லை. 34 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 24 பள்ளிகள் இயங்கின. 10 பள்ளிகள் திறக்கப்படவில்லை.


Next Story