சீனாவில் இருந்து மதுரை வந்த தாய்-மகளுக்கு கொரோனா உறுதி -விமானத்தில் உடன் பயணித்த 70 பேருக்கு பரிசோதனை


சீனாவில் இருந்து மதுரை வந்த  தாய்-மகளுக்கு கொரோனா உறுதி -விமானத்தில் உடன் பயணித்த 70 பேருக்கு பரிசோதனை
x

சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமானத்தில் மதுரை வந்த தாய்-மகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அந்த விமானத்தில் உடன் வந்த 70 பயணிகளுக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை


சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமானத்தில் மதுரை வந்த தாய்-மகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அந்த விமானத்தில் உடன் வந்த 70 பயணிகளுக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா

புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக சீனா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இந்தியாவில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடந்த 24-ந் தேதி முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காலை இலங்கையில் இருந்து ஒரு விமானம் மதுரை வந்தது. அந்த விமானத்தில் 72 பயணிகள் மதுரை வந்தனர். அந்தப் பயணிகளுக்கு சதவீத அடிப்படையில் (ரேண்டம் முறையில்) ஒரு சிலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மீதமுள்ள பயணிகள் தங்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டவர்களின் பரிசோதனை முடிவுகள் நேற்று மாலையில் வெளியாகின. அதில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

விசாரணை

இதனைத் தொடர்ந்து அவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டதில் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் சீனாவில் இருந்து இலங்கை மூலம் மதுரை வந்த 39 வயது பெண், மற்றும் அவரது 6 வயது மகள் என்றும் தெரியவந்து இருக்கிறது. அந்த பெண்ணுடன் வந்த மற்றொரு 15 வயது மகளுக்கு கொரோனா இல்லை.

இதனை தொடர்ந்து அந்த தாயும்- 6 வயது சிறுமியும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறார்கள்.

அந்த பெண்ணின் கணவர் சீனாவில் வேலை பார்த்துள்ளார். அவருடன் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் கணவர் கடந்த மாதம் தமிழகம் திரும்பிவிட்டார்.

இந்த நிலையில்தான் தாய் மற்றும் மகள்கள், சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்துள்ளார்கள்.

70 பயணிகளுக்கும்...

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் பாஸ்போர்ட்டுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. அவர்கள் எந்த நாட்டில் இருந்து மதுரைக்கு வருகிறார்கள், எந்தெந்த நாடுகளுக்கு எல்லாம் பயணித்திருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் மதுரை விமான நிலையத்திற்கு வந்த தாய் மற்றும் 2 மகள்களின் பாஸ்போர்ட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் அவர்கள் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் அவர்கள் 3 பேருக்கும் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டதில் தாய், 6 வயது சிறுமிக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது குறித்த தகவல் விருதுநகர் மாவட்ட சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அவர்களுடன் விமானத்தில் பயணித்த 70 பயணிகளுக்கும் இதுகுறித்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அனைத்து பயணிகளும் அந்தந்த மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், தங்களை 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story