ஒரே மொபட்டில் சென்ற போது கார் மோதி புதுப்பெண் தாய், தந்தையுடன் பலி-கொண்டலாம்பட்டி அருகே சோகம்
கொண்டலாம்பட்டி அருகே ஒரே மொபட்டில் சென்ற போது கார் மோதி புதுப்பெண் தாய், தந்தையுடன் பலியானார்.
கொண்டலாம்பட்டி:
புதுப்பெண்
சேலம் கொண்டலாம்பட்டி அருகே கல்பாரப்பட்டி செம்பாய்க் காட்டுப்பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது53). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள் (49). இந்த தம்பதியின் மகள் பூங்கொடி (23). இவருக்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆகிறது.
இதற்கிடையே நேற்று காலை பாட்டி வீட்டுக்கு சென்று வருவதாக பூங்கொடி தனது கணவர் வீட்டில் கூறினார். பின்னர் தன்னுடைய தாய், தந்தை ஆகியோருடன் மொபட்டில் பூங்கொடி சென்றார். 3 பேரும் ஒரே மொபட்டில் சென்றனர்.
கார் மோதியது
கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப்பட்டி மலம்காட்டுக்கு சென்று விட்டு 3 பேரும் மீண்டும் அதே மொபட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் உத்தமசோழபுரம் சூளைமேட்டின் வழியாக ஒருவழிப்பாதையில் வந்து கொண்டிருந்தனர். மொபட்டை வெங்கடாசலம் ஓட்டி வந்தார்.
அப்போது அந்த வழியாக எதிரே கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் வெங்கடாசலம், மாரியம்மாள், பூங்கொடி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். 3 பேரும் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
3 பேர் சாவு
இதுபற்றி தகவல் அறிந்ததும் கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் பூங்கொடி, மாரியம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். வெங்கடாசலம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை போலீசார் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் வெங்கடாசலம் பரிதாபமாக இறந்தார். 3 பேரது உடல்களையும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் புதுப்பெண் தாய், தந்தையுடன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.