தாய், மகன் உடல் நசுங்கி பலி
சிதம்பரம் அருகே கோவிலுக்கு சென்றபோது நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் இருவரும் பரிதாபமாக இறந்தனர்
புவனகிரி
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு...
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 44). இவருடைய மனைவி பரிமளா (42). இவர்களது மகன் தருண்ராஜ் (19).
இந்த நிலையில் பழனிவேல் தனது மனைவி, மகனுடன் ஒரு காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு புறப்பட்டார். காரை விக்கி(28) என்பவர் ஓட்டிச் சென்றார்.
அந்த கார், நேற்று அதிகாலை 3 மணியளவில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரி வண்டுராயன்பட்டு அருகே வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் புவனகிரி-விருத்தாசலம் சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது அந்த கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
தாய், மகன் பலி
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில் படுகாயம் அடைந்த பரிமளா, தருண்ராஜ் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
படுகாயம் அடைந்த பழனிவேல், விக்கி ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
போலீசார் விசாரணை
விபத்து பற்றிய தகவல் அறிந்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நோில் பார்வையிட்டனர்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவிலுக்கு சென்றபோது சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் தாய், மகன் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.