1½ வயது குழந்தையை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை


1½ வயது குழந்தையை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:15:49+05:30)

நெல்லை அருகே 1½ வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

தென்காசி

பனவடலிசத்திரம்:

நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். இவருடைய மகள் பிரவீணா (வயது 25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகேந்திரன் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 1½ வயதில் அகிமா என்ற பெண் குழந்தை இருந்தது. தாய் வீடு அருகே உள்ளதால் பிரவீணா அடிக்கடி அங்கு சென்று வருவார். நேற்று முன்தினம் தனது தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் பிரவீணாவின் தாய் பாப்பா வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டில் பிரவீணாவும், குழந்தை அகிமாவும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாப்பா கதறி அழுதார்.

இதுகுறித்து தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நெல்லை புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பிரவீணா தனது குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து தானும் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார். பிரவீணா குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அவரும், போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story