2 குழந்தைகள் இறந்த சோகத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை
2 குழந்தைகள் இறந்த சோகத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2 குழந்தைகள் இறந்த சோகத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
திருச்சி கருமண்டபம் சமத்துவநகரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி தமிழரசி (வயது 39). இவர்களுக்கு 3 மகள்கள் இருந்தனர். இதில் 2 மகள்கள் தற்கொலை செய்து இறந்துவிட்டனர். இதனால் சோகத்திலும், மன அழுத்தத்திலும் இருந்த தமிழரசி, வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷம் குடித்தார்.
இதில் மயங்கி விழுந்த அவரை, அக்கம், பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தயிர் சாதம் சாப்பிட்டவர் சாவு
*திருச்சி உறையூர் செவந்தி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேஷாசலம் (51). இவருக்கு திருமணம் முடிந்து 30 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை தயிர் சாதம் சாப்பிட்ட சேஷாசலம் சிறிது நேரத்தில் இறந்துள்ளார். இதுகுறித்து அவரது சகோதரர் ராஜேஷ் கண்ணா கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து, சேஷாசலம் தயிர்சாதம் சாப்பிட்டதால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுவிற்ற மூதாட்டி கைது
*சோமரசம்பேட்டை அடுத்துள்ள தாயனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் குஞ்சம்மாள் (63). இவர் அரசு மதுபானங்களில் அதிக போதை தருவதற்காக கலப்படம் செய்து விற்பனை செய்து வந்தார். சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பெண் மாயம்
*ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி தனலட்சுமி (39). இவர் திருச்சி இ.பி.ரோடு பாரதியார் வீதியில் தனது தாயார் கமலமாரி (60) வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் தனலட்சுமி தனது குழந்தைகளுக்கு சரிவர உணவு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கமலமாரி தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் தனது தாயார் மீது கோபத்தில் இருந்த தனலட்சுமி, கடந்த 3-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அவர் ராமநாதபுரத்துக்கும் செல்லவில்லை. அவர் என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து கமலமாரி கொடுத்த புகாரின் பேரில் திருச்சி கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தைகளை தவிக்கவிட்டு மாயமான தனலட்சுமியை தேடி வருகிறார்கள்.
ஆட்டோ திருடியவர் கைது
*திருச்சி கீழ்கண்டார்கோட்டை மீனாட்சி நகரை சேர்ந்தவர் ராஜராஜசோழன் (35). இவர் தனது ஆட்டோவை பொன்மலை ரெயில்வே மருத்துவமனை முன் நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை வந்து பார்த்த போது அவருடைய ஆட்டோவை காணவில்லை. இதுகுறித்து பொன்மலை குற்றப்பிரிவு போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஆட்டோவை திருடிய பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகரை சேர்ந்த ஆனந்தகுமார் (32) என்பவரை கைது செய்து ஆட்டோவை கைப்பற்றினர்.
பூக்கடையில் மதுவிற்ற பெண் கைது
*சமயபுரம் கீழரத வீதியை சேர்ந்தவர் தேவி (40). இவர் பூக்கடையில் மதுபாட்டிலை பதுக்கி வைத்து விற்றதாக சமயபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.