விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற தாய்-மகள் பலி
மொடக்குறிச்சி அருகே ஸ்கூட்டரில் சென்ற தாய்-மகள் விபத்தில் பலியாகினர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே ஸ்கூட்டரில் சென்ற தாய்-மகள் விபத்தில் பலியாகினர்.
தாய்-மகள் பலி
மொடக்குறிச்சி பூந்துறைசேமூர் அருகே உள்ள நரிக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் மொடக்குறிச்சியில் நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கோமதி (வயது 32). இவர்களுடைய மகள் சுகுதி (4). இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கோமதியும், அவரது மகள் சுகுதியும் ஸ்கூட்டரில் மொடக்குறிச்சியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.
பட்டறை வேலம்பாளையம் பகுதியில் சென்றபோது அவருக்கு முன்னால் கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிராக்டரை முந்தி செல்வதற்கு கோமதி முயன்றார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிள் வந்ததால் கோமதி நிலைதடுமாறி, மகளுடன் கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் சக்கரம் அவர்கள் 2 பேர் மீதும் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் தலை நசுங்கி கோமதியும், சுகுதியும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விசாரணை
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோமதி, சுகுதி ஆகியோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாய்-மகள் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.